தமிழகத்தில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணத்தால் மாவட்டங்கள் அனைத்தும் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டு நோய் தொற்று நிலவரத்திற்கு ஏற்றவாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சென்னை உட்பட 28 மாவட்டங்களில் தமிழக அரசு போக்குவரத்து உட்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருந்தது.
கொரோனா அதிகம் பாதித்த 11 மாவட்டங்களில் முன்பிருந்த கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு மூன்று வகையான மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை வருகிற ஜூலை 12-ம் தேதி வரை அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேநீர் கடைகளிலும் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களை மூன்று வகையாகப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று வகையான மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி,கல்லூரி, உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள், மதுக்கூடங்கள் , நீச்சல் குளங்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையே அரசு போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை நீட்டிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.