ஓபிஎஸ் ராஜினாமா செய்யாவிட்டால் அவரைத்தான் முதல்வராக்கி இருப்பேன்…தொலைபேசியில் சசிகலா பேச்சு!
கடந்த சில தினங்களாக அதிமுக தொண்டர்களிடையே உற்சாகமும், சலசலப்பும் காணப்பட்டு வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் வி.கே.சசிகலா அவர்களின் தொடர் தொலைபேசி உரையாடலே ஆகும்.
சிறைத் தண்டனை முடிந்து வீடு திரும்பிய சசிகலா அரசியலில் தடம் பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பும் பொய்யாகும் விதமாக அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அவரது தொலைபேசி உரையாடல் அவர் மீண்டும் அரசியலில் கால் பதிப்பார் என்ற நம்பிக்கையை தொண்டர்கள் மத்தியில் கொடுத்துள்ளது.
ஆனால், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், அவருடன் தொலைபேசியில் உரையாடும் அதிமுக நபர்களை கட்சியில் இருந்து நீக்கியும் வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சசிகலா பேசிய புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர், ஓபிஎஸ் அவராகத்தான் ராஜினாமா செய்தார் எனவும், அவ்வாறு அவர் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரைத்தான் முதல்வராக்கி இருப்பேன் எனவும் பேசியுள்ளார்.
ஏற்கனவே வெளியான ஆடியோக்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோ மேலும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோ சசிகலா அவர்கள் பேசிய 44-வது ஆடியோ என்பது குறிப்பிடத்தக்கது.