6 மாதங்களைத் தொட்ட விவசாயிகள் போராட்டம்! கருப்பு தினமாக அனுசரிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் துவங்கினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டுப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, இன்று எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு, காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எவ்வளவு நாட்கள் ஆனாலும், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.