பாலியல் புகாரில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியர்! நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை கே.கே.நகரிலுள்ள பிஎஸ்பிபி தனியார் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவர்கள், பாலியல் புகாரளித்துள்ளனர். மேலும், நிர்வாகத்திடம் புகாரளித்தது மட்டுமல்லாமல் அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அந்தப் புகார் கடிதத்தில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ராஜாகோபாலன் என்பவர், ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், வகுப்பறையில் பாடமெடுக்கும்போதும், மாணவிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில், அவர்களின் தோற்றத்தைப் பற்றி கருத்து தெரிவித்தல், தவறான நோக்கத்துடன் மாணவிகளைத் தொடுதல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் குற்றஞ்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்தப் புகாரை பள்ளி நிர்வாக கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ”சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும் அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.