காணாமல் போன மீனவர்களை மீட்க சீமான் கோரிக்கை!

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயலால் கேரளாவின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாகை சாமந்தன்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் சென்று 17 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் திரும்பவில்லை. எனவே, அவர்களை மீட்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “
காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்க்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற நாகை சாமந்தான்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் 17 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது பெரும் கலக்கத்தையும், சோகத்தையும் அவரது குடும்பத்தினரிடையேயும், மீனவர்களிடையேயும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், 17 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியன்று கடலுக்குச் சென்ற அவர்களது படகு, டவ்தே புயல் எச்சரிக்கையை அடுத்து கரை திரும்பும்போது, சிக்கி மூழ்கியதால் நாகை மீனவர்கள் 10 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்துவருகின்றனர். அக்குடும்பத்தினரின் துயர்போக்க மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அரசின் தலையாயக்கடமையாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, மத்திய அரசிடம் பேசி விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் காணாமல்போன நாகை மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியை துரிதப்படுத்தி மீனவர்களை விரைந்து மீட்கவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.