புகை நமக்கு பகை! மருத்துவ துறை அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுப்பது குறித்து பல்வேறு வதந்திகளும் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது.
அதில் ஒன்று தான் ஆவி பிடிப்பது. அண்மையில், தினமும் ஆவி பிடித்தால் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து விடலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வந்தது.
மக்களும் இதனை நம்பி வீட்டிலேயே ஆவி பிடித்தனர். அதுமட்டுமல்லாமல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் கருவிகள் வைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் அதில் ஆவி பிடித்து வந்தனர்.
இதற்கு மருத்துவத் துறையினர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பலர் ஒரே கருவியைப் பயன்படுத்தி ஆவி பிடிக்கும் போது, தொற்று பரவவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆவி பிடிப்பது கொரோனாவை விரட்டாது என அறிவியல்பூர்வமாக நிரூபித்தும் உள்ளனர்.
இந்நிலையில், “மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது” என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தவிர, பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவுள்ளது, இதனை ஊக்குவிக்க கூடாது.இது போன்ற நிகழ்வுகளால் நுரையீரல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியமும் மக்களை எச்சரித்துள்ளார்.