பதவியேற்ற பத்து நாட்களில் உயிரிழந்த சோகம்!
தமிழகத்தில், கொரோனாவின் இரண்டாவது அலையில் வேகம் எல்லைதாண்டி சென்று கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பொதுமக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த நீஷ்(47), மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து பின் வள்ளியூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பின், வென்டிலேட்டர் வசதியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று பத்தே நாட்களில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.