கொரோனாவிற்காக அதிமுக ரூ.1 கோடி நிதி!
தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா சூழலால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பொது மக்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த வகையில், பல பொது மக்களும், அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஈ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், “கொரோனா தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும். மேலும், அதிமுக எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் ஒரு மாத ஊதியமும் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
அதிமுக தொண்டர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எம்.ஜி.ஆரின் கொள்கை வழி நின்று நிவாரணப் பணிகளில் அக்கறை கொள்ளுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.