தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு புதிய கட்டணம்! தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது பரவலின் வேகம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன் இன்றியமையாதது.
ஆனால். அனைவருக்கும் அரசின் ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளை அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான புதிய கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாயும், 10 கிலோ மீட்டருக்கு பிறகு, வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ 25 கூடுதல் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கிலோ மீட்டர் வரை 2000 ரூபாயும், அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும்.
வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டர் வரை 4000 ரூபாயும், 10 கிலோ மீட்டருக்குப் பிறகு வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ 100 கூடுதல் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.