தஞ்சையில் திருநங்கைகள் பேருந்தில் இலவசப் பயணம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியாகின.
அதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக நேற்று பதவியேற்றார்.
பதவியேற்ற பின் அதிரடியாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் மகளிர் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதும் ஒன்று.
நேற்று இந்தக் கோப்பில் கையெழுத்திட்ட நிலையில், இன்று அது நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாநகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்தனர்.
தஞ்சையிலும் மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்தனர். மேலும் தஞ்சையில் திருநங்கைகளும் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.
இலவசப் பயணம் குறித்து திருநங்கைகள் நெகிழ்ச்சி பொங்கப் பேசினர். மேலும் அரசின் இந்த அதிரடி அறிவிப்பு உதவிகரமாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.