புதிய துறைக்கு சிறப்பு அலுவலர்!
தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் இன்று பதிவியேற்றுக் கொண்டதும் அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் முக்கியமான 5 அம்சங்களுடன் கூடிய கோப்புகளில் தனது முதல் கையெழுத்தை பதிவிட்டார். இதில், பரப்புரையின் போது, பெற்ற மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறை நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களுக்குள் ஆய்வு செய்து, கோரிக்கைகளை நிறைவேற்றிட புதிய துறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.
இதன்படி, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படுகிறது.
ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். இவர் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.