அந்த மனசு தான் கடவுள்… இந்தியாவிற்கு உதவும் நியூசிலாந்து!
இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து ஒரு மில்லியன் நியூசிலாந்து டாலர்களை (சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் தற்போது இந்தியாவின் நிலைமை மோசமடைந்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதையடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு உதவி வருகின்றன.
ஏற்கெனவே சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்துள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் நியுசிலாந்து நாடும் இணைந்துள்ளது. இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை (இந்திய மதிப்பில் 5.35 கோடி ரூபாய்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மஹுதா கூறுகையில், இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் நாங்கள் நிற்கிறோம். மக்களின் உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் இந்திய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையை பாராட்டுகிறோம். இந்திய மக்களுக்கு உதவுவதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு நியூசிலாந்து அரசு அனுப்பியுள்ளது. நம்பிக்கை மிகுந்த அந்த நிறுவனம் இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து மக்களின் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.