தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு- தொடரும் அவமதிப்பு!
புதிய தேசிய கல்விக்கொள்கையை 17 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நிலையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள 1986ம் ஆண்டு வகுக்கப்பட்ட பழமையான தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு, ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. இதற்கு பல மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கை, மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்வி கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதற்கு தமிழக கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.