சிவகாசியில் தொடரும் சோகம்… இதற்கு தீர்வே இல்லையா?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்கதையாக மாறியுள்ளது.கடந்த 2 மாதங்களில் மட்டும் 8 பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் நிகழ்ந்துள்ளன.இன்றும் சிவகாசியில் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்று ஏற்பட்ட இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.பட்டாசு ஆலை தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதற்கெல்லாம் யார் காரணம்?

பட்டாசு என்பது நம்மை பொறுத்தவரை நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பயன்படும் ஒரு வெடிபொருள்.தீபாவளி பண்டிகை,அரசியல்வாதிகளின் வருகை,திருமண அழைப்பு போன்ற நிகழ்வுகளுக்கு நாம் பட்டாசு வெடித்து விட்டு அதன்பின் நம்முடைய வேலையை பார்க்க சென்று விடுவோம்.இப்படி பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடோ, இதனை தயாரிப்பவர்களின் நிலையோ நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை.

நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் பட்டாசுகளை தயாரிக்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. நமக்கு வண்ண பட்டாசுகளை கொடுக்கும் அவர்களின் வாழ்க்கை இருளிலேயே உள்ளது.அதற்கு காரணம் ஆண்டுதோறும் ஏற்படும் பட்டாசு ஆலை விபத்துக்களே சான்றாகும்.

பட்டாசு ஆலை தீ விபத்து ஏற்படும்போது மட்டும் சில நாட்களுக்கு விதிமீறல்கள் குறித்து பேசிவிட்டு அதன்பின் அரசும் அவர்களின் நிலை குறித்து மறந்து விடுகிறது.இதனால் அவர்களின் சோகம் தொடர்கதையாகவே உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பட்டாசு வெடிப்பதற்கு தடைவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,பசுமை பட்டாசுகளை வெடிக்கவும் மற்றும் நேரக்கட்டுப்பாடுகளையும் அறிவித்தது உச்சநீதிமன்றம்.

இந்த உச்சநீதிமன்றத்தின் தடை வரவேற்க்கத் தக்கதாக இருந்தாலும் பட்டாசுத் தொழிலையே நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

பட்டாசுத் தயாரிக்கும் தொழில் சிவகாசி மக்களின் வாழ்வாதாரமாகவும் மற்றும் வாழ்க்கையைப் பறிக்கும் எமனாகவும் இருந்து வருகிறது.இந்த இருமுனை கூர் கத்தியை அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *