பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? எதிர்பார்த்து காத்திருக்கும் அற்புதம்மாள்!
30 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவரது தாயார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வந்த முன்னள் பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வருகின்றனர்.
இதனையடுத்து பேரறிவாளனின் தாய் அறுபுதம்மாள் தனது மகனை விடுவிக்க கோரி தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு, பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவானது உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணையிலிருந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்றும் இதுதொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சிபிஐ மற்றும் பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தும் விசாரணை முடியாத நிலையில், தான் அவரது விடுதலை தொடர்பாக முடிவெடுக்க முடியாது என்று ஆளுநர் கூறியிருந்தார். இதனால் பேரறிவாளன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை ஆளுநர் எடுத்துள்ளதாக கூறும் அற்புதம்மாள், அவர் தனது கடிதத்தின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அற்புதம்மாள் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்று வரும் ஒருவருக்கு ஜாமீன் வழங்க முடியும் என்றும் வேறொரு வழக்கை மேற்கோள் காட்டி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையில் விசாரிக்கப்பட உள்ளது.