மறுபடியும் முதல்ல இருந்தா… மீண்டும் விடாது திமுகவை தாக்கும் கர்ணன்!

கர்ணன் படத்தில் குறிப்பிடப்படும் கர்ணன பட சம்பவம் நிகழ்ந்த ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானதை அடுத்து தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 9 ம் தேதி வெளியான திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில், ரஜிஷா விஜயன், லால், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் கொரோனா பரவல் இடையிலும் திரையரங்கில் வெளியான இத்திரைப்படம், கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கொடியன்குளம் கலவரத்தை பற்றி பேசும் இந்த திரைப்படம் சமூகவலைத்தளத்தில் மிகப்பெரும் உரையாடலை உருவாக்கியுள்ளது.  அதே நேரத்தில் சர்ச்சைகளும் வெடித்துள்ளது. ஏற்கெனவே ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பெயரில் பாடல் வெளியானபோது, இந்தப் பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாகக் கூறி, இதனைப் படத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனையடுத்து அந்தப்பாடல், ‘மஞ்சனத்திப் புராணம்’ என மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கொடியன்குளம் சம்பவம், 1995-ல் (ஜெயலலிதா ஆட்சியில்) நடந்ததாகவும் அதனைத் தவறாக 1997 -ல் (கலைஞர் ஆட்சியில்) நடந்துள்ளதைப் போல சித்தரித்துள்ளதாவும் கூறப்படுகிறது. இதனையடுத்து படம் வெளியானதிலிருந்து திமுக இளைஞரணி செயலாளர் உட்பட பலரும் கடும் அதிருப்திகளை தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி!” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று கர்ணன் படத்தில் காட்டப்பட்ட கொடியன்குளம் நிகழ்வு, ‘1997-ன் முற்பகுதியில்’ என்பதில் இருந்து ‘1990களின் பிற்பகுதியிலிருந்து’ என மாற்றப்பட்டுள்ளது. ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1990 ம் ஆண்டில் ஆட்சியில் இருந்ததும் திமுக அரசு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *