ஸ்ரீவில்லிபுத்தூரில் மீண்டும் தேர்தல்…? தேர்தல் ஆணையர் பதில்!

  ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்த சூழ்நிலையில் அங்கு தேர்தல் மீண்டும் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞரான மாதவராவ் போட்டியிட்டார். வேட்புமனுத் தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்ட மாதவராவுக்கு ஓரிரு நாளில்  உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூச்சுத்திணறல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 2 அன்று வாக்கு எண்ணிக்கையை அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்த மாதவராவ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மாதவராவ் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, ”தேர்தல் முழுமையாக முடிந்து விட்டது. வேட்பாளர் உயிரிழந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதில் எதிர் வேட்பாளர் வெற்றிப்பெற்றால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராவார். ஒருவேளை மாதவராவ் வெற்றி பெற்றால் அந்தத்தொகுதி வேட்பாளர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு பின்னர் அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பின்னர் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்த தேதியை அறிவிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *