அடித்து சொல்கிறேன் மேற்கு வங்கத்தில் பாஜக 100 தொகுதிகள் கூட வெற்றி பெறாது – பிரசாந்த் கிஷோர்!

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதாக கட்சி 100 தொகுதிகளில் கூட வெற்றிப் பெறாது என்றும், தைரியமிருந்தால் தான் பேசிய முழு ஆடியோவையும் வெளியிடுமாறும் பிரசாந்த் கிஷோர் சவால் விட்டுள்ளார்.

மேற்கு வங்கத் தேர்தல் குறித்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சைக்கு உள்ளானது. பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசும் அந்த பிரசாந்த் கிஷோர் அந்த ஆடியோவில், இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தூக்கி எரியப்படும். திரிணாமுல் நடத்திய சர்வேயில் பாஜகவுக்கு ஆதரவு அலை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து ஆதிகாரி வெளியேறியது இந்தத் தேர்தலில் சிறிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் இந்த தேர்தல் ‘கணிப்பு’ தொடர்பான ஆடியோ தேசிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் ஆடியோ பதிவிற்கு விளக்கம் அளித்துள்ளார்

அவர் பேசுகையில், “ஆடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்கள் தைரியத்துடன், நான் பேசிய முழுப் பகுதியின் ஆடியோவையும் வெளியிட வேண்டும். நான் பேசியபோது எனக்கு முழு அறிவு இருந்தது, அது ஒரு பொதுத் தளம் என்று தெரிந்துதான் பேசினேன். நான் பேசிய சிறிய பகுதிகளை மட்டுமே வெளிப்படுத்தி பாஜகவினர் உற்சாகமடைய வேண்டாம். இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களை தாண்டாது. ” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *