அத நீக்குங்க… மொயீன் அலியின் விருப்பத்தை நிறைவேற்றிய சிஎஸ்கே நிர்வாகம்!
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி, அணியின் ஜெர்ஸியில் மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்தின் பிராண்ட் அடையாளம் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது ஜெர்சியிலிருந்து அதனை நீக்க அணி நிர்வாக ஏற்றதை ரசிகர்கள் பலரும் பாரட்டி வருகின்றனர்.
வரும் ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் போட்டி 2021 சீசன் தொடங்குகிறது. முன்னதாக, பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் 2021 ஏலத்தில் 33 வயதான மோயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடி வந்தார். இந்த நிலையில் ஐபிஎல் 2021ம் ஆண்டு சீசன் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடுகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியில் எஸ்.என்.ஜே 10000 சின்னம் உள்ளது. இது சென்னையச் சேர்ந்த எஸ்.என்.ஜே டிஸ்டில்லரிகளின் (மதுபானம்) தயாரிப்பு பிராண்டாகும். அதனால், தனது கொள்கைப்படி, சிஎஸ்கே ஜெர்சியில் மதுபானம் தயாரிப்பு நிறுவனத்தின் பிராண்ட் உள்ளதால் அதை அணிய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மொயீன் அலியின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்ட, சிஎஸ்கே நிர்வாகம் மொயீன் அலி கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு, அவரது ஜெர்சியிலிருந்து மதுபான தயாரிப்பு நிறுவன லோகோவை நீக்கியுள்ளது.
மோயீன் அலி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவருடைய மத நம்பிக்கைப்படி மது அருந்துவது, மதுவை ஊக்குவிப்பது பாவம். இந்த நிலையில் மொயீன் அலியின் கொள்கையை ரசிகர்கள் பலரும் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.