ரயிலில் இரவு நேரங்களில் இனி செல்போன் சார்ஜ் செய்ய தடை!

 மின்கசிவால் விபத்து ஏற்படுவதை தடுக்க இனி ரயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி பயணிகள் யாரும் செல்போன் சார்ஜ் போடக்கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ரயிலில் மின்கசிவு காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ரெயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்டுகளை பயணிகள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ரெயில் பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரைத்தார்.

இதனையடுத்து தற்போது ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி ரயில்களில், இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது. ரெயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள ரெயில்வே, அதுகுறித்து பயணிகள் உள்ளிட்டோருக்கு 7 நாட்களுக்கு தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல ரெயில்வே நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *