தமிழகம் திரும்பிய தடகள வீராங்கனை தனலெட்சுமிக்கு உற்சாக வரவேற்பு!

பஞ்சாபில் நடந்த தேசிய பெடரேசன் கோப்பை தடகளப்  போட்டியில் முன்னாள் தடகள வீரர் பிடி உஷாவின் சாதனயை முறியடித்து நேற்றிரவு ஊர் திரும்பிய தமிழக வீராங்கனை தனலெட்சுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24-வது தேசிய பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகள் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை தனலெட்சுமி 100 மீ ஓட்டத்தில் பந்தய தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து தங்க பதக்கமும், 200 மீ ஓட்டத்தில் 23.26 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனைகளான ஹீமாதாஸ், டூட்டி சந்த் மற்றும் பி.டி உஷாவின் சாதனையையும் முறியடித்தார்.

இதனையடுத்து சாதனை படைத்த தனலெட்சுமிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் போட்டிகளை முடித்துக் கொண்டு வெற்றி பதக் கங்களுடன் ரயில் மூலம் நேற்றிரவு திருச்சிக்கு வந்த தனலெட்சுமிக்கு ரயில் நிலையத்தில் சக வீரர்கள், வீராங்கனைகள், விளையாட்டு ஆர்வலர்கள், உறவினர்கள் திரளாக பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.

அவரது பயிற்சியாளரான மணிகண்ட ஆறுமுகத் துக்கும், தடகள போட்டியில் வென்ற இலக்கியதாசன், விக்னேஷ் ஆகியோருக்கும் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், பூங்கொத்துகளைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *