ரூ.9,300 கோடி பயிர் நஷ்டஈடு பெற்று தந்த மாநிலம் தமிழ்நாடு,வந்தவாசி தொகுதியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வந்தவாசி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, விவசாயம் செழிக்க விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. 40,000 ஏரிகளை தூர்வார ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு மூலமாக நீர் நிரம்பி காட்சியளிக்கிறது என்றார்.
மேலும், ரூ.9,300 கோடி பயிர் நஷ்டஈடு பெற்று தந்த மாநிலம் தமிழ்நாடு தான். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்று விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
விவசாயிகள் கஷ்டம் நீங்கி ஏற்றம் பெறுவதற்காக பாடுபடும் அரசு அதிமுக அரசு. விவசாயிகளுக்கு முதன்முறையாக நஷ்டஈடு வழங்கியது அதிமுக தான். இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.