அதிமுக அமைச்சரின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிக்கை அளித்த திமுக வேட்பாளர்!

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காணும் அமைச்சர் வேலுமணியின் வேட்புமனுவை நிராகரிக்க கோரி திமுக வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சரான எஸ்.பி. வேலுமணி தொடர்ந்து 3 வது முறையாக போட்டியிடுகிறார். இவர் கடந்த 16ம் தேதி கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான, தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜெ.செந்தில் அரசனிடம் தனது வேட்புமனுவைத்  தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சர் வேலுமணியை எதிர்த்து, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், கார்த்திகேய சிவசேனாபதி நேற்று முன்தினம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.பி.வேலுமணிக்கு ரூ.3 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளது சிறிதும் நம்பும்படியாக இல்லை என குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை எனவும், அதனால் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டுமெனவும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *