உதயசூரியன், இரட்டை இலை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட முடியாதா? திடீர் வழக்கால் பரபரப்பு

அங்கிகரிக்கப்பட்ட கட்சிக்கான சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடக் கூடாது என மனு கொடுக்கப்பட்டுள்ளது.வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவை அடுத்த வாரம் உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு வைக்கும் முதல் நிபந்தனையே இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளது என்பது தெரிந்ததே.
குறிப்பாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள தமாக உள்பட ஒருசில கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் கூட்டணி வேட்பாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
இந்த வழக்கின் விசாரணையின்போது கூட்டணி கட்சிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்களில் போட்டியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் திண்டாட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.