பட்டாசாய் பரபரத்த பட்லர்… 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி!
3வது இருபது ஓவர் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான 3 வது டி20 போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா 15 ரன்களிலும், ராகுல் டக் அவுட் ஆகியும் விக்கெட் இழந்து வெளியேறினர். தனது அறிமுக போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய இஷான் கிசான் 4 ரன்கள் என இதனால் இந்திய அணி 24 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அதனைத் தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் 25, ஸ்ரேயாஸ் ஐயரும் 9 என அடித்து வெளியேறினர். நிலைத்து நின்று ஆடிய கேப்டன் கோலி டி20 போட்டிகளில் தனது 27வது சர்வதேச அரைசதத்தை நிறைவு செய்தார்.. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 குவித்தது இந்திய அணி. அதிகப்பட்சமாக கோலி 77 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய் 9 ரன்னிலும், மாலன் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் மற்றும் பேர்ஸ்டோவும் இந்தியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இறுதியில் இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஜோஸ்பட்லர் 83 ரன்களும், பேர்ஸ்டோ 40 ரன்களும் எடுத்தனர்.
இதன்மூலம், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.