தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தபடுமா? சுகாதார செயலர் பேட்டி!

தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உட்பட 19 மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதர செயலாளர் ராதாகிருஷ்னண் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சமீபகாலமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தினமும் 500 பேருக்கு மேல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகம் மகாராஷ்டிரா, கேரளா உட்பட 19 மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு கொரோனா அதிகம் காணப்பட்ட பகுதிகளில் தற்போது குறைவாகவே காணப்படுகிறது.
அரசியல் கூட்டங்கள், குடும்ப நிகழ்ச்சிகளால் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி முகம் , கைகளை கழுவ வேண்டும்.
மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் போன்ற எந்த வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் போடப்படும் தடுப்பூசிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்று தெரிவித்தார்.