சசிகலாவிடம் ஊர்ந்து போய் பதவி வாங்கியதை பழனிசாமி மறுக்க முடியுமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி
சேலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது பிரச்சாரம் செய்தார்.
வேட்பாளர் அறிவிப்பு பிறகு தமிழகம் முழுவதும் திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இன்று சேலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, ”எடப்பாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சசிகலாவின் காலில் தவழ்ந்து சென்று முதல்வர் பதவி பெற்றார். சசிகலாவிடம் எடப்பாடி ஊர்ந்து போய் பதவி வாங்கியதை மறுக்க முடியுமா?
தேர்தல் தோல்வி பயத்தில் ஆத்திரத்தில் ஜெயலலிதா மரணத்திற்கு எங்களை குற்றம்சாட்டி வருகிறார் பழனிசாமி. 4 ஆண்டு காலத்தில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையான விசாரணை நடத்தாதது ஏன்? ஆறுமுக சாமி ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செலம் ஆஜராகாதது ஏன்?
திமுகவின் தேர்தல் அறிக்கையானது கதாநாயகன் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று கூட சொல்ல முடியாது. அது காமெடி வில்லன். இன்னும் இலவச ஹெலிகாப்டர், இலவச விமானம் தருகிறோம் என்று மட்டும் தான் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை.
வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும். ஆங்கில பத்திரிக்கைகளின் கருத்துகணிப்புகளும் அதைதான் சொல்கின்றன. அதேநேரத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” என்று தெரிவித்தார்.