சட்டமன்ற தேர்தலில் நானும், ராதிகாவும் போட்டியிடவில்லை – சரத்குமார்!
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருக்கும் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 37 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ளார். மேலும் தானும், ராதிகா சரத்குமாரும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து பிரிந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, தமிழக தேர்தல் களத்தில் 3வது அணியாக கருதப்படும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து வருகின்ற தேர்தலை சந்திக்கிறது. அதன்படி சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து வந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 37 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்தார். மேலும் தானும், ராதிகா சரத்குமாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 3 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கே திரும்பிக்கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பினை எதிர்ப்பார்க்காத அக்கட்சியின் தொண்டர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.