அதிமுகவின் இலவச திட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது? சீமான் கேள்வி!
அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலவசங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியில் பாதிக்கு பாதியாக பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வரும் தேர்தலில் முதல்முறையாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சீமான், இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஏற்கனவே சுமார் ரூ.6 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், இலவசம் என்ற பெயரில் வெற்று அறிக்கைகளை திராவிட கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அதிமுக தேர்தல் அறிக்கையில் வாசிங்மிஷின் இலவசம் என்று கூறியுள்ளார்கள். தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட குடும்ப அட்டை இருக்கிறது. ஒரு வாசிங்மிஷின் விலை ரூ.15,000 வரை வரும், ஆகையால், இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து கொண்டு வருவார்கள். அதுக்கு ஒரு திட்டத்தை வகுத்து சொல்லுங்கள் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.