புதுச்சேரியில் தனித்து போட்டியிடும் தேமுதிக!
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, கூட்டணியில் இருந்து விலகியது. பாமக கொடுத்த அழுத்தம் காரணமாகவே சீட் இழுபறியில் தேமுதிக வெளியேறியது என்று தகவல்கள் சொல்லப்பட்ட நிலையில், யாருடனும் கூட்டணி அமைக்காமலேயே தனித்து போட்டியிடும் திறன் தேமுதிகவுக்கு இருக்கிறது என்று விஜயகாந்த் மகன், மைத்துனர், மனைவி ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே பேசி வந்தது அதிமுகவுக்கு அதிக அழுத்தம் கொடுத்தது என்கிறார்கள்.
இந்நிலையில், புதுச்சேரியில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடப் போவதாக அம்மாநில செயலர் வி.பி.பி வேலு இன்று தெரிவித்தார். முதல்கட்டமாக ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தார். பாகூரில் வி.பி.பி வேலு, உப்பளம் – சசிகுமார், காலாபேட் – ஹரிஹரன் என்ற ரமேஷ், நெடுங்காடு – ராம்டீம் ஞானசேகர், திருநள்ளாறு – ஜிந்தா என்ற குரு ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
ஓரிரு நாட்களில் மீதமுள்ள 25 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் புதுச்சேரிக்கு வருவார்கள் என்றும் தெரிவித்தார்.