காலையில் கட்சியில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கு மாலையில் சீட் ஒதுக்கிய தினகரன்!
இன்று காலை அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மாலையில் அந்த கட்சியில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
சாத்தூர் தொகுதியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மனுக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அவர்களுக்கு இடையேயான பிணக்கம் தொடர்ந்து நீடித்து வந்தது. இருவரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் நேற்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜவர்மன் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. அவர் மட்டுமல்லாமல் தற்போது எம்எல்ஏவாக உள்ள 41 பேருக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் முதல்வர், துணை முதல்வரிடம் முறையிடப் போவதாக கூறியிருந்த ராஜவர்மன் இன்று காலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து அமமுக வெளியிட்டுள்ள 2ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் நபர்களை அமமுக தன் பக்கம் இழுப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த தொகுதிகளில் தொண்டர்களுக்கு கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதனால் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.