மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ஆதிராஜாராமை களமிறக்கும் அதிமுக! திட்டம் எடுபடுமா?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் கொளத்தூரில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான ஆதிராஜாராம் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதிமுக சார்பில் அனைத்து கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதிமுக சார்பில் போட்டியிடும் 171 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாம் கட்ட பட்டியில் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம் என்ற மாவட்டச் செயலாளர் போட்டியிடுகிறார். ஆதிராஜாராம் தற்போது தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராகவும் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் உள்ளார்
ஆதிராஜாராம் ஏற்கனவே கடந்த 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர். அந்த தேர்தலில் மு.க. ஸ்டாலினைவிட ஆதிராஜாராம் 2,468 வாக்குகள் மட்டுமே பெற்றார். எனவே, இந்த முறையில் ஸ்டாலினுக்குச் சவால் விடுக்கும் வகையில் அவரையே அதிமுக களமிறக்கியுள்ளது.
அதேநேரம் அதிமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த அப்சரா ரெட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.