தமிழகத்திற்கு 3 நாள் சுற்றுபயணமாக வந்துள்ளார் இந்திய ஜனாதிபதி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு இடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருவதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 9ம் தேதி மாலை விமானம் மூலம் சென்னை வரும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மார்ச் 10 ம் தேதி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 16 வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மார்ச் 11 ம் தேதி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 41 வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.
மேலும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம், முதன்முறையாக யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழக பயண விபரங்கள் :
மார்ச் 9 – மாலை 4.25 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 7.05 மணிக்கு சென்னையில் தரையிறங்குகிறார். தொடர்ந்து அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார்.
மார்ச் 10 – காலை 9.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 11.20 மணிக்கு வேலூர் செல்லும் ஜனாதிபதி, திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் நடைபெறும் 16-வது ஆண்டுவிழாவில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி பொற்கோயிலை பார்வையிடுகிறார். அடுத்து மாலை 4.55 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ஜனாதிபதி, மாலை 5.45 மணிக்கு சென்னை திரும்பி மீண்டும் இரவு ராஜ்பவனில் தங்குகிறார்.
மார்ச் 11 – காலை 10.50 மணிமுதல் 12 மணிவரை சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெறும் 41-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து 12 மணிக்கு அண்ணா பல்கலைகழத்தில் இருந்து புறப்படும் ஜனாதிபதி 12.20 மணிக்கு சென்னை விமானநிலையம் சென்றடைவார். அதனைத் தொடர்ந்து 12.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் டெல்லி செல்கிறார்.