என்.ரங்கசாமி – பாஜக கூட்டணி; மகா சிவராத்திரியன்று வெளியாகும் மகா அறிவிப்பு!

புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமை ஏற்கிறது. மகா சிவராத்திரி நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸைத் தனது கூட்டணியில் சேர்க்க பாஜக கடும் முயற்சி எடுத்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ரங்கசாமியிடம் பேசினார். அதைத் தொடர்ந்து, ரங்கசாமி தனது நிர்வாகிகளுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் இன்று (மார்ச் 8) பிற்பகல் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், ரங்கசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 45 நிமிடங்கள் நடந்த கூட்டத்துக்குப் பிறகு வந்த ரங்கசாமியிடம் கேட்டதற்கு, “விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். நிச்சயமாக விரைவில் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதுபற்றி கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “மத்தியில் உள்ள பாஜக ஆட்சியோடு இணக்கமாகச் சென்றால்தான் புதுச்சேரிக்கு நன்மை கிடைக்கும். அத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளைத் தர பாஜக தயாராக உள்ளது. முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிப்பதாகவும் உறுதி தந்துள்ளனர். அதனால் பாஜக கூட்டணியில் தொடரலாமா என்று ரங்கசாமி கேட்டார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் பலரும் ரங்கசாமியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டணி தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்பார்” என்று தெரிவித்தனர்.

ரங்கசாமி தலைமை ஏற்பார்: நிர்மல்குமார் சுரானா

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தனியார் உணவகத்துக்கு ரங்கசாமி சென்றார். அங்கு பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் பாஜக தலைவர் சாமிநாதன் வந்தனர். அவர்கள் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினர்.

அதைத் தொடர்ந்து, மேலிடப் பொறுப்பாளர் சுரானாவிடம் கேட்டதற்கு, “பாஜக கூட்டணியில் ரங்கசாமி தொடர்ந்து நீடித்து வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறும். ரங்கசாமி தலைமையை ஏற்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தயாராக இருக்கிறது. ஓரிரு நாளில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து பாஜக கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமை ஏற்பது உறுதியாகியுள்ளது. மேலும் மகா சிவராத்திரி நாளில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் இரு கட்சி வட்டாரங்களும் உறுதி செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *