சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பேரணி… பெண்கள் மட்டுமே பங்கேற்க மம்தா பானர்ஜி அழைப்பு!
கொரோனா தொற்று காரணமாக முடங்கிய பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
பிப்ரவரி 4-ம் தேதிதான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 25 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது முறையாக ரூ.50 உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.785 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைப் போன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றன.
டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15 வரை மூன்று மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 125 அதிகரித்துள்ளது. இதனைக் கண்டித்து, இன்று மேற்கு வங்காளத்தில் மம்தா பேனர்ஜி பேரணி நடத்த உள்ளார். இந்தப் பேரணியில் பெண்கள் மட்டுமே பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா, சமையல் எரிவாயு விலையேற்றத்தால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சிரமப்படுவதாக கூறினார்.