கீழடி 7ம் கட்ட அகழாய்வில் பானை ஓடுகளின் குவியல் கண்டெடுப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பானை ஓடுகளின் குவியல் கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது 7-வது கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல, கொந்தகை, அகரத்திலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கீழடியில் மொத்தம் 9 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு ஒரு குழி தோண்டும் பணி நடக்கிறது. இதில் 2 அடி ஆழத்தில் ஏற்கெனவே பாசிமணிகள், சில்லு வட்டு, பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் மணலால் ஆன கூம்பு வடிவ பாத்திரம், மண் மூடிகள் கிடைத்தன.
தற்போது 4 அடிக்கு மேலாக தோண்டிய நிலையில், பழங்கால பானை ஓடுகளின் குவியல்கள், கருங்கல் போன்ற அமைப்பும், கரித்துகள்களும் கிடைத்துள்ளன. தொடர்ந்து குழி தோண்டும்போது மேலும் பழங்காலப் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.
கொந்தகையில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் மேற்கொண்ட இடத்துக்கு கிழக்குப் பகுதியில் 2 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பெரிய அளவில் ஒரு குழி தோண்டப்பட்டு வருகிறது. இதேபோல அகரத்திலும் குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.