வேற வழியே இல்ல… கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து, லாரி உரிமையாளர்கள், இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சண்முகப்பா, நேற்று கூறியதாவது: ”தினமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. இதனால் பல பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளோம். ‘ஸ்க்ராப்’ என்ற பழைய வாகனங்களை இரும்பு கடைக்கு அனுப்புவது கட்டாயமாக்கும் கொள்கை, வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு என, பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இதற்கு தீர்வு காணும்படி, பல முறை அரசிடம் கோரியும் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, இன்று ஒருநாள் மாநிலம் முழுவதும் லாரி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். மார்ச், 5ல் கூட்டம் நடத்தி, மார்ச், 15 முதல் காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும்.
மத்திய அரசின் ஸ்க்ராப் கொள்கையை எதிர்க்கிறோம். எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுப்போம். எங்கள் வாகனங்களை, ஸ்க்ராப்புக்கு அனுப்ப மாட்டோம். மத்திய அரசு, டாடா மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களுடன் சேர்ந்து, இது போன்ற கொள்கைகளை கொண்டு வர முற்பட்டுள்ளது. வேறு மாநிலத்துக்கு செல்லும், கர்நாடகா லாரிகளுக்கு விலை குறைவு என்பதால், அங்கு டீசல் போடப்படுகிறது. இதனால், கர்நாடகாவுக்கு, 1.60 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைகளில், ‘டோல்’ என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. மாநிலத்தின், 11 நெடுஞ்சாலைகளில், டோல் வசூல் காலகட்டம் முடிந்தும், நிர்வகிப்பு பெயரில் பணம் வசூலிக்கின்றனர். பா.ஜ., ஆட்சியில் உள்ள, மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில், வரி குறைக்கப்படவில்லை.பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால், தொழில் எப்படி நடத்துவது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., பிரிவில் சேர்க்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.