வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு!
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் நெருங்குவதால், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கட்சியுடன் தான் கூட்டணி என ராமதாஸ் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
6 மாதத்திற்கு முன்பு, வன்னியர் இடஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடும் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிச்சாமி தாக்கல் செய்தார்.
இதன்படி, பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு 20% இடஒதுக்கீட்டை 3ஆக பிரித்து, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும் எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், எம்.பி.சி பிரிவில் எம்.பி.சி – வி என்ற உள்பிரிவு உருவாக்கப்பட்டு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு அதில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது என்றாலும் இந்த மசோதா தற்காலிகமானது என்றும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த மசோதா மாற்றி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.