சிவகாசி பட்டாசு ஆலை விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

சிவகாசி, காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் நாக்பூர் வெடிமருந்து கழகத்தின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையை தங்கராஜ் பாண்டியன் என்பவர் நடத்தி வந்துள்ளார். ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் மொத்தம் 36 அறைகள் உள்ளன.
வழக்கம்போல், நேற்று முன் தினம் (பிப். 24) தொழிலாளர்கள் பணியாற்றி வந்தபோது, மருந்து பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்தில் 30-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியது.
சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக போராடி, தீயில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 19 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து உரிமையாளர் தங்கராஜ் பாண்டியன், காவல்துறையினரிடம் சரணடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்த்துப்போன மருந்தை உபயோகித்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.