மின்சார ரயில்கள் நிறுத்தம்… பொதுமக்கள் அவதி!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் ஆரம்பமாகி உள்ளது. இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிகவும் குறைவான பேருந்துகளை இயங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

சென்னையை பொருத்தவரை இன்று காலை வெறும் 80பேருந்துகள் மட்டுமே பணிமனையில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக பயணிகள் மாற்று ஏற்பாடாக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில் சேவையும் திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயர் மின் கேபிள் அறுந்துவிட்டதால் மின் வினியோகம் தடைபட்டு இருப்பதால் ஆங்காங்கே பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த அறுந்த உயர் மின் கேபிள்களை சரி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பணி முடிந்தவுடன் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 1 மற்றும் 2 வது லைனுக்கு பதிலாக, 3 மற்றும் 4வது விரைவு ரயில்களின் பாதையில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலானோர் மின்சார ரயில்களை பயன்படுத்தும் நிலையில், இன்று திடீரென இந்த மின்சார ரயிலிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *