வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் – திருமாவளவன் உறுதி!
திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது உறுதி என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக, கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு, அதிக வாக்குகளை பெற்ற தொகுதிகளை தேர்வு செய்து வருகிறது.
2001-ம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இணைந்தது. கடலூரில் உள்ள மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருமாவளவன் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகு, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக கூட்டணியில் அம்பு சின்னத்தில் விசிக 9 தொகுதிகளில் போட்டியிட்டது. 2 தொகுதிகளில் வென்று தமிழக சட்டப்பேரவையில் விசிக அடியெடுத்து வைத்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் கூட்டணியில் விசிக, 25 தொகுதிகளில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, ஒன்றில் தனிச் சின்னத்திலும், மற்றொன்றில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இதனால், அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே, இந்த முறை தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் விசிக உறுதியாக இருக்கிறது.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “குறைந்தது 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால் முன்கூட்டியே தனிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். இல்லையெனில் வேட்புமனு தாக்கல் முடிந்ததும் தனிச் சின்னம் கிடைக்கும். சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதால் 2 மணி நேரத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டுச் சேர்க்க முடியும். எனவே, தனிச் சின்னத்தில் போட்டியிடுவது வெற்றிவாய்ப்பைப் பாதிக்காது. அது ஒரு பிரச்சினையாகவும் இருக்காது” என்றார்.
தனிச் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கும் விசிக, 2011-ல் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது.