சந்திராயன் 3 விண்கலம் 2022 ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்… இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!

அனைத்து பரிசோதனைகளையும் முடித்து சந்திரயான்-3 வரும் 2022-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம்தேதி ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, செப்டம்பரில் நிலவை நெருங்கியபோதிலும், நிலவில் சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக கூறப்படுகிறது.

அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நிலவை ஆர்பிட்டர் ஓராண்டாக சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு இறுதியில் சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவுசெய்தது. ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள் சுமார் 6 மாத காலம் வரை முடங்கின. இதனால் சந்திரயான்-3 உள்ளிட்ட திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ராக்கெட் ஏவுதல், செயற்கைக் கோள் தயாரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், ”சந்திரயான் திட்டப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. அனைத்து வித பரிசோதனைகளையும் முடித்து 2022-ம் ஆண்டில் விண்கலத்தை விண்ணில் ஏவ முடிவு செய்துள்ளோம். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் பரிசோதனை ஓட்டம் இந்த ஆண்டு இறுதியில் செயல்படுத்தப்பட உள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *