“பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மத்திய அரசின் கைகளில் இல்லை” – உண்மையை ஒப்புக்கொண்ட நிர்மலா சீதாராமன்!
சென்னை தியாகராய நகரில் சிட்டிசன் ஃபோரம் அமைப்பின் சார்பில், மத்திய பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா, மிகவும் தர்மசங்கடமான கேள்வி என குறிப்பிட்டார். எண்ணெய் நிறுவனங்கள் நினைத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க முடியும் எனவும், எரிபொருட்கள் மீதான வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொழில் முனைவோரின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கான தேவையை குறைவின்றி நிறைவேற்றி வருகிறார் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.