பருவநிலை மாற்றத்தால் வரலாறு காணாத குளிரில் தத்தளிக்கும் அமெரிக்கா!
புவி வெப்பமயமாதலின் பாதிப்பால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வரலாறு காணாத குளிரால் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மின்சாரமும், தண்ணீரும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் கூட்டு முயற்சி எடுக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாநாட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதலில் அமெரிக்கா இணைந்த நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சியில் விலகியது. இந்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு எதிராக இருப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், புவி வெப்பமயமாதலின் பாதிப்பை அமெரிக்கா நேரடியாக சந்தித்து வருகிறது. பொதுவாக கடும் குளிரால் பாதிக்கப்படாத அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வரலாறு காணாத குளிரால் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. அங்கு 30 வருடத்திற்கு பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மைனஸ் 10 முதல் 15 டிகிரி வரை குளிர் வாட்டி எடுப்பதால், சாலைகள், வீடுகள் எங்கும் பனிக்கட்டியாக காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பு இல்லாமல் மக்கள் இருளில் தவிக்கின்றனர். சுமார் 2 லட்சம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மின்சாரம் இன்றி ஸ்தம்பித்து போயுள்ளன.
அதை விட கொடுமை குளிரால் தண்ணீர் குழாய்கள் உருகி பல இடங்களில் வெடித்துப் போயுள்ளன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். அரசு தரப்பில் நிவாரணமாக தரப்படும் பாட்டில் குடிநீரை வாங்க, மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். நேற்று முன்தினம் சூரியன் இலேசாக தலைகாட்டியதால், மக்கள் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நகரில் இதுவரை குளிருக்கு 40 பேர் வரை இறந்துள்ளனர். அங்கு குளிர் குறையத் தொடங்கினாலும், மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் முழுமையாக வழங்க இன்னும் நீண்ட நாட்களாகும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப்பின் உத்தரவால் 4 ஆண்டுகளுக்கு முன் விலகிய அமெரிக்கா, நேற்று முன்தினம் மீண்டும் அதில் இணைந்தது. புதிய அதிபர் ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, அமெரிக்கா இதில் இணைந்தது. இதை ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் வரவேற்றுள்ளார்.