என்ன அரசியல் நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் முன்னாள் ஐஏஎஸ் சகாயம்..? சென்னையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது!

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்துடன் தமிழக மக்களை சந்தித்து வந்த சகாயம் ஐஏஎஸ் அரசியலுக்கு வர இருக்கிறார்.
தனது பணிகாலத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர் சகாயம் ஐஏஎஸ். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இவர் கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்தார். அதற்கு பிறகு கோ-ஆப்டெக்ஸ் அதிகாரியாக இருந்து பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
ஆனாலும் அவருக்கு மேல் இருப்பவர்களின் அழுத்தம் காரணமாக அவரால் தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனையடுத்து ஜனவரி 31ஆம் தேதி விருப்ப ஓய்வு வேண்டும் என்று கேட்டிருந்தார்.
ஆனால் ஜனவரி 6ஆம் தேதியே தமிழக அரசு அவருக்கு ஓய்வு வழங்கியது. பணி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் ஜே.பி.பாரடைஸ் மைதானத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம், வாருங்கள் நேர்மையாளர்களே என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.