பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகத்தில், கொரோனா காலப் பொது முடக்கத்துக்குப் பின் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020 – 2021 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வுகள் நடைபெறும். இதில், காலை 10 மணி முதல் 10.10 வரை மாணவர்கள் கேள்வித்தாளை வாசிக்கவும், 10.10 முதல் 10.15 வரை மாணவர்களின் சுயவிவரம் சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வியாண்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.