கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்த இந்து எழுச்சி முன்னணியினர்

காதலர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் ஒரு நாள் என்றால், அது காதலர் தினம் தான். ஏற்கனவே காதலில் விழுந்தவர்கள் தங்கள் இதயத்தைக் கவர்ந்தவருக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தும், காதலைச் சொல்ல காத்திருப்பவர்கள் இந்த நாளில் அதை வெளிப்படுத்தி கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
ஆனால், ஒரு சிலர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேனியில், இந்து எழுச்சி முன்னணி சார்பாக காதலர் தினத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கழுதைக்கும், கழுதைக்கும் மாலை மாற்றி திருமணம் நடத்தி வைத்தனர்.

பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சிவன் ஆலயம் முன்பாக நடைபெற்ற நிகழ்வைத் தொடர்ந்து, காதலர் தினத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் காதலர் தின வாழ்த்து மடல்களை கழுதைக்கு உணவாக அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாழ்த்து மடல்களை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் ரவி, ”நம் நாட்டிற்கு அன்பும், காதலும் தேவைப்படுகிறது. உண்மையான காதலை நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக காதல் என்ற போர்வையில் நடைபெறும் கலாச்சார சீரழிவு மற்றும் பெற்றோரின் கனவுகளை அழிக்கும் செயலில் ஈடுபடுவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். மேலும் இன்றைய தினத்தில் கோவை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு பொதுமக்கள் மற்றும் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று கூறுயுள்ளார்.